தூத்துக்குடி மாவட்டத்தில் முககவசம், சமூக இடைவெளி கடைபிடிக்காத 785 பேர் மீது நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 785 பேருக்கு ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில், கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருவதால் முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.200-ம், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
அதன்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பொது இடங்களில் முககவசம் அணியாததற்காக, தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 232 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 46 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 56 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 66 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 76 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 154 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 69 பேர் மீதும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 46 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும் சமூக இடைவெளி கடைபிடிக்காததற்காக, தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 8 பேர் மீதும், தூத்துக்குடி ஊரகம், ஸ்ரீவைகுண்டம், மணியாச்சி, சாத்தான்குளம் ஆகிய உட்கோட்டங்களில் தலா ஒருவர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 6 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 20 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மட்டும் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 785 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.