நாளை முதல் தளவுர்கள் இல்லாத ஊரடங்கு: தூத்துக்குடி மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலுக்கு வருவதையொட்டி தூத்துக்குடி மாா்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனர்.
தூத்துக்குடி:
தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலையைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 10-ந்தேதியில் இருந்து நாளை (திங்கட்கிழமை) வரையிலும் ஊரடங்கு அமலில் இருந்தது.
இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) முதல் மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று மதியம் அறிவிக்கப்பட்டது. மேலும் நேற்றும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.
இதனால் தூத்துக்குடியில் காலை 10 மணி வரை வழக்கம்போல் மளிகை கடைகள், காய்கறி கடைகள் திறந்து செயல்பட்டன. காய்கறி மார்க்கெட், மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட், புதிய பஸ் நிலையம் மற்றும் வ.உ.சி. கல்லூரி அருகே அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து மாலையில் சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. தூத்துக்குடியில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.