குருசாமிபாளையம் வாரச்சந்தையில் சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்கள்
குருசாமிபாளையம் வாரச்சந்தையில் பொருட்களை வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்களால் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராசிபுரம்:
வாரச்சந்தை
ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் தங்கள் கடைகளை அமைத்து காய்கறி, பழங்கள், மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இங்கு ராசிபுரம் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள்.
இதனிடையே கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் சந்தை, கடந்த வாரம் சனிக்கிழமை கூடியது.
தொற்று அதிகரிக்கும் அபாயம்
இந்தநிலையில் சனிக்கிழமையான நேற்றும் வாரச்சந்தை கூடியது. இதில் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் கடைகளை அமைத்து பொருட்களை விற்பனை செய்தனர். இவற்றை வாங்க சந்தையில் பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.