ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதிகளில் திடீர் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதிகளில் திடீரென மழை பெய்தது.;
ராசிபுரம்:
ராசிபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை ராசிபுரத்தில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் சிறிது நேரத்தில் திடீரென மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடி, தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதேபோல் நேற்று மாலை 6 மணிக்கு நாமகிரிப்பேட்டை பகுதியில் திடீரென மழை பெய்தது. இதனால் கடைகளுக்கு பொருட்கள் வாங்க சென்ற பொதுமக்கள் மழையில் நனைந்தபடி வாகனங்களில் சென்றதை காணமுடிந்தது. இரவில் குளிர்ச்சியான காற்று வீசியது. இந்த திடீர் மழையால் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.