குமரியில் முன்னேற்பாடு வசதிக்காக கடைகள் திறப்பு
அடுத்த ஒரு வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தபட உள்ள நிலையில் பொதுமக்கள் முன்னேற்பாடு செய்துகொள்ள வசதியாக குமரியில் நேற்று மாலை கடைகள் திறக்கப்பட்டன.;
நாகர்கோவில்:
அடுத்த ஒரு வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தபட உள்ள நிலையில் பொதுமக்கள் முன்னேற்பாடு செய்துகொள்ள வசதியாக குமரியில் நேற்று மாலை கடைகள் திறக்கப்பட்டன.
ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. எனினும் காய்கறி, மளிகை மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் 10 வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை.
எனவே ஊரடங்கை கூடுதல் கட்டுப்பாடுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த முழு ஊரடங்கு நாளை (திங்கட்கிழமை) காலை முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதையொட்டி பொதுமக்கள் முன்னேற்பாடு வசதி மேற்கொள்ள வசதியாக நேற்றும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) கடைகளை திறக்கவும், பஸ்களை இயக்கவும் அனுமதிக்கப்பட்டது.
கடைகள் திறப்பு
இதைத் தொடர்ந்து நேற்று மாலை குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடைகள் திறக்கப்பட்டன. அரசு உத்தரவு வந்தவுடனே மளிகை கடைகள் உடனடியாக திறக்கப்பட்டன. அதன்பிறகு காய்கறிக்கடைகள், பேன்சி கடைகள், கவரிங் கடைகள், சிறிய வகையான துணிக்கடைகள், நகை கடைகள் மற்றும் பெட்டி கடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டன.
நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட்டில் நேற்று மாலை பெரும்பாலான பலசரக்கு கடைகள் திறக்கப்பட்டன. இதுபோல், அவ்வை சண்முகம் சாலை, மணிமேடை சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கேப் ரோடு, கே.பி. ரோடு, கோர்ட்டு ரோடு, கலெக்டர் அலுவலக சாலை, செம்மாங்குடி ரோடு, அலெக்சாண்ட்ரா பிரஸ் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடைகள் ஓரளவுக்கு திறக்கப்பட்டன.
பரபரப்பு
இதில் பல கடைகளில் மக்கள் கூட்டம் இருந்தது. பொதுமக்கள் கார், இரு சக்கர வாகனங்களில் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். அத்துடன் நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் பஸ்கள் ஓடத்தொடங்கின. இதனால், நேற்று மாலை முதல் இரவு வரை மாவட்டம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க பெருமளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.