மோட்டார் சைக்கிளில் சென்றபோது தவறி விழுந்து போலீஸ் ஏட்டு பலி - மற்றொரு போலீஸ்காரர் படுகாயம்
மோட்டார் சைக்கிளில் சென்றபோது தவறி விழுந்ததில் போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார். மற்றொரு போலீஸ்காரருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
கிணத்துக்கடவு,
புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் பெரியார்நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 46). இவர் கோவையில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு குற்றப்பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு செஞ்சேரிமலையில் பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டது. எனவே நேற்று முன்தினம் கண்ணன் தன்னுடன் பணியாற்றும் போலீஸ்காரர் சிவக்குமார் (47) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் செஞ்சேரி மலைக்கு சென்றார். பின்னர் அவர்கள் பணியை முடித்துவிட்டு இரவில் கோவை திரும்பினார்கள்.
கண்ணன் மோட்டார் சைக்கிளை ஓட்ட, சிவக்குமார் பின்னால் அமர்ந்து இருந்தார். அவர்கள் இருவரும் கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டி லட்சுமிநகர் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்பினார்கள். அப்போது திடீரென்று மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட கண்ணன், சிவக்குமார் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயம் அடைந்த சிவக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியான கண்ணனுக்கு புவனேஸ்வரி (43) என்ற மனைவியும், நிஷாந்தினி (16) என்ற மகளும், பார்த்திபன் (13) ரிஷ் (8) என்ற மகன்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.