பா.ஜனதாவினருக்கே நம்பிக்கை இல்லை நாங்கள் கொரோனா தடுப்பூசியை எதிர்க்கவில்லை டி.கே.சிவக்குமார் பேச்சு

நாங்கள் கொரோனா தடுப்பூசியை எதிர்க்கவில்லை என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.

Update: 2021-05-22 16:53 GMT
பெங்களூரு, 

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசும்போது கூறியாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு இளைஞர் காங்கிரசார் அதிகளவில் உதவி செய்து வருகிறார்கள். வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும். நமது நாட்டு மக்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்க வேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு சொல்கிறது. கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு ஆன்லைன் குறித்து என்ன தெரியும். அதனால் இளைஞர் காங்கிரசார் கிராமப்புறங்கள் முதல் நகரங்கள் வரை பொதுமக்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்ய உதவி செய்து வருகிறார்கள்.

எங்கள் மாணவர் காங்கிரசார் கடந்த கொரோனா முதல் அலையின்போது ரத்த தானம் செய்தனர். இப்போதும் அவர்கள் ரத்த தானம் முகாம்களை நடத்தி வருகிறார்கள். 160 இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. 150 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. அரசு அறிவித்துள்ள நிவாண உதவி போதுமானதாக இல்லை.

அதனால் உள்ளூர் அளவில் உள்ள எங்கள் கட்சி தலைவர்கள், மக்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்கி வருகிறார்கள். ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் வழங்குகிறார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு காஙகிரஸ் பல்வேறு ரீதியில் உதவி செய்கிறது. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எங்களின் கடமை.

நாங்கள் எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சி நிதி மூலம் ரூ.100 கோடியில் தடுப்பூசி செயல் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இது அவர்களின் சொந்த பணமா? என்று சிலர் கேள்வி எழுப்பியுளளனர். அப்படி என்றால் அவர்கள் மக்கள் சேவையாற்ற சொந்த பணத்தை பயன்படுத்துகிறார்களா?.

வளர்ச்சியை விட மக்களின் உயிர்களை காக்க வேண்டியது மிக முக்கியம். எதிர்க்கட்சி தலைவர் கலெக்டர்களிடம் விவரங்களை பெற முடிவு செய்தார். இதற்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. ஆனாலும் நாங்கள் எங்களின் போராட்டத்தை கைவிட மாட்டோம். நாங்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம். இதை அரசு காப்பாற்றிக்கொள்ளவில்லை. நாங்கள் கொரோனா தடுப்பூசியை எதிர்க்கவில்லை. ஆனால் முழுமையான சோதனை முடிவடையாத நிலையில் முதலில் சுகாதாரத்துறையினருக்கு வழங்கி அவர்கள் மீது சோதனை நடத்தியதை தான் நாங்கள் எதிர்த்தோம்.

தொடக்கத்தில் இந்த தடுப்பூசி மீது பா.ஜனதாவுக்கே நம்பிக்கை இல்லை. அந்த தடுப்பூசியை முதலில் பிரதமர் போட்டுக்கொள்ளாமல் ஏழை மக்களுக்கு செலுத்தி சோதனை செய்தனர். தடுப்பூசியை நாங்கள் எதித்தோம் என்றால், நாங்கள் ஏன் தடுப்பூசியை போட்டுக் கொண்டோம். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்