விழுப்புரத்தில் தேவையின்றி சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை உறுதிமொழி எடுக்க வைத்த போலீசார்
விழுப்புரத்தில் ஊரடங்கை மீறிய 100 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதோடு தேவையின்றி சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை போலீசார், உறுதிமொழி எடுக்க வைத்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கையொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று விழுப்புரம் காந்தி சிலை, ரெயில்வே மேம்பாலம் அருகில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது, முருகன், பாஸ்கர், பாலசிங்கம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஊரடங்கை மீறி சாலைகளில் தேவையின்றி சுற்றி வந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் இறங்கினர்.
அந்த வகையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கச்செல்கிறோம் என்ற பெயரில் ஊரடங்கை மீறுகிற வகையில் தேவையின்றி சாலைகளில் உலா வந்த 97 பேரின் இருசக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் மற்றும் ஒரு கார் என 100 பேரின் வாகனங்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
உறுதிமொழி எடுத்த வாகன ஓட்டிகள்
அதன் பின்னர், அவர்களிடம் இனிமேல் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்து உறுதிமொழி எடுக்க வைத்தனர். அதாவது இனிமேல் அரசின் ஊரடங்கு உத்தரவை மதித்து நடப்போம், தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வந்து நோய் பரவலுக்கு காரணமாக இருக்க மாட்டோம் என்று வாகன ஓட்டிகள் உறுதிமொழி எடுத்தனர்.மேலும் வாகன ஓட்டிகள் மத்தியில் போலீசார் பேசுகையில், போலீசாரை வேண்டாதவர்கள் என்று நினைக்காதீர்கள், உங்களின் நன்மைக்காகத்தான் சொல்கிறோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமல் நிரம்பி வழிகிறது. இதையெல்லாம் தயவு செய்து உணர்ந்து பாருங்கள். தற்போது கொரோனாவை விட அதிகமாக கருப்பு பூஞ்சை என்ற நோய் இன்னும் கொடூரமாக பரவி வருகிறது. சாவை நாமே தேடிச்செல்லக்கூடாது. அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியே வாருங்கள். தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். கொரோனா என்ற கொடிய நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு அளியுங்கள் என்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினர்.