விழுப்புரம் மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்ட பஸ்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

Update: 2021-05-22 15:57 GMT
விழுப்புரம், 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவு நாளை (திங்கட்கிழமையுடன்) முடிவடைய உள்ள நிலையில் கொரோனா தொற்று குறையாமல் இன்னும் வேகமாக பரவி வருவதால் அதனை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் மேலும் ஒரு வார காலத்திற்கு எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று நேற்று அரசு உத்தரவிட்டது.

அதேநேரத்தில் வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நேற்று, இன்று) அரசு மற்றும் தனியார் பஸ்கள் வெளியூர் செல்வதற்கு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பஸ் போக்குவரத்து தொடங்கியது

இந்த அறிவிப்பினை தொடர்ந்து நேற்று மாலையில் இருந்து தமிழகம் முழுவதும் 12 நாட்களுக்கு பிறகு மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணியில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. முன்னதாக பஸ்கள் கிருமி நாசினியால் நன்கு சுத்தம் செய்த பிறகே இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தற்போது மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதையொட்டி பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்ல முடியாததால் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை எண் 1, 2, 3 ஆகியவற்றில் இருந்து பஸ்கள் கொண்டு வரப்பட்டு விழுப்புரம் புதிய பஸ் நிலைய நுழைவுவாயில் அருகில் இருந்து இயக்கப்பட்டன. இருப்பினும் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டதால் அவர்களின் தேவைக்கேற்ப குறைந்த எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒரு சில பயணிகளே பயணம் செய்ததால் பஸ்கள் காலியாகவே சென்றன. அதுபோல் ஆட்டோக்கள், வாடகை கார்கள், வேன்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே ஓடின. பயணிகள் கூட்டம் குறைவாக இருப்பதை கருதி மாவட்டத்தில் தனியார் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்