தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் வெளியேற்றம் பணியாளர்களுடன் வாக்குவாதம்
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் மருத்துவ பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி, மே.23-
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 4 வார்டுகளில் 500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு நோயாளிகளுடனும் அவரது உறவினர் ஒருவர் தங்கி உதவி செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வார்டில் கலெக்டர் ஆய்வு நடத்தினார். அப்போது கொரோனா வார்டில் தங்கியிருந்த உறவினர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்கள் மீண்டும் மருத்துவமனைக்குள் வர அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் கொரோனா வார்டுகளை மருத்துவக்குழுவினர் பார்வையிட வருவதாக கூறி நேற்று நோயாளிகளின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோரை மருத்துவ பணியாளர்கள் வெளியேற்றினர். ஆனால் கொரோனா வார்டுகளுக்கு எந்த மருத்துவக்குழுவினரும் வரவில்லை.
வாக்குவாதம்
இதனையடுத்து வெளியே காத்திருந்த நோயாளிகளின் உறவினர்கள் மீண்டும் வார்டுக்குள் செல்ல முயன்றனர். அப்போது, அவர்களை மருத்துவபணியாளர்கள் உள்ள செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் நோயாளிகளை தவிர உறவினர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறினர். இதை நோயாளிகளின் உறவினர்கள் ஏற்க மறுத்து மருத்துவ பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை அளிப்பதில்லை, இந்த நிலையில் நாங்களும் இல்லாவிட்டால் யார் அவர்களை கவனித்து கொள்வார்கள்? என்று கேள்வி கேட்டனர். எங்களை உள்ளே விடாவிட்டால் நோயாளிகளை எங்களுடன் திருப்பி அனுப்பி விடுங்கள். நாங்கள் வீடுகளுக்கு அழைத்து செல்கிறோம் என்று முறையிட்டனர். இதையடுத்து சுமார் ஒருமணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற வாக்குவாதத்திற்கு பின்னர் உறவினர்கள் வார்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.