கூட்ட நெரிசலை தடுக்க பெரிய மார்க்கெட்டை சுற்றியுள்ள வீதிகளில் தடுப்புகள் அமைப்பு
கூட்ட நெரிசலை தடுக்க பெரிய மார்க்கெட் சுற்றியுள்ள வீதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரிய மார்க்கெட்டில் இயங்கி வந்த காய்கறி கடைகளை புதிய பஸ் நிலையத்துக்கும், தட்டாஞ்சாவடிக்கும் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்தது. இதற்கு பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து காய்கறி கடைகள் மீண்டும் மார்க்கெட்டிலேயே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அடிக்காசு கடைகள் மட்டும் நேருவீதிக்கு மாற்றப்பட்டது. அங்கு கடைகள் வைப்பதற்காக நகராட்சி அதிகாரிகள் குறியீடு வரைந்தனர்.
இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் பெரிய மார்க்கெட்டில் மொத்த மற்றும் சில்லரை கடைகள் செயல்பட்டன. ஆனால் நேரு வீதியில் அடிக்காசு கடைகள் திறக்கப்படவில்லை.
இதற்கிடையே கூட்ட நெரிசலை தடுக்க பெரிய மார்க்கெட்டை சுற்றியுள்ள வீதிகளில் போலீசார் தடுப்பு அமைத்தனர். அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான நேரு வீதி, காந்தி வீதி, காசுகடை வீதி, ரங்கப்பிள்ளை வீதிகளில் தடுப்பு அமைத்து அடைத்தனர். இதனால் காய்கறி வாங்க வந்தவர்கள் சிறிது தூரத்திலேயே தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து சென்றனர். அப்போது ஒரு சிலர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதற்கிடையே பெரிய மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க வந்த சிலர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் நின்று கொண்டிருந்தனர். ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.
இதேபோல் மார்க்கெட் வியாபாரிகள் சிலர், தட்டாஞ்சாவடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் காய்கறி கடைகளை திறந்து நேற்று வியாபாரம் செய்தனர்.