மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும் புயல் பாதிப்பை நேரில் ஆய்வு செய்த உத்தவ் தாக்கரே அறிவிப்பு
புயல் பாதித்த பகுதிகளில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது வரும் காலங்களில் புயல் சேதத்தை குறைக்கும் வகையில் கடலோரங்களில் நிரந்த கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும் என்று அவர் கூறினார்.
மும்பை,
அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல் கடந்த திங்கட்கிழமை இரவு குஜராத் மாநிலத்தில் கரையை கடந்து கடும் சேதத்தை விளைவித்தது. குஜராத்தில் இந்த புயலுக்கு 53 பேர் பலியாகினர்.
இதேபோல மராட்டிய தலைநகர் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை கடுமையாக ஆக்கிரமித்த இந்த புயல் பாதிப்பு 19 உயிர்களை காவு வாங்கியது.
குறிப்பாக ரத்னகிரி, சிந்துதுர்க் உள்ளிட்ட பகுதிகளை கடுமையாக தாக்கியது. மேலும் அங்கு கடும் பயிர் சேதத்தையும் ஏற்படுத்தியது.
இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று புயலால் பாதிக்கப்பட்ட கொங்கன் மண்டலத்தில் உள்ள ரத்னகிரி, சிந்துதுர்க் பகுதியை பார்வையிட்டு சேத விவரங்களை நேரில் ஆய்வு செய்தார்.
காலையில் ரத்னகிரியில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அவர் மேலும் மாவட்ட அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தினார். அவர்களிடம் சேதமதிப்பீட்டை வழங்க உத்தரவு பிறப்பித்தார்.
ராய்காட்டை தொடர்ந்து அவர் சிந்துதுர்க் மாவட்டத்திற்கு சென்றார்.
அங்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அடிக்கடி ஏற்படும் புயல் பாதிப்பு காரணமாக பயிர்கள், சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவதுடன் உயிர் சேதங்களும் ஏற்படுகின்றன.
இதுபோன்ற புயல்களால் ஏற்படும் சேதங்களை குறைக்க கடற்கரையில் நிரந்தர உள்கட்டமைப்புகளை உருவாக்க மத்திய அரசின் உதவியை எனது தலைமையிலான அரசு நாடும்.
‘தவ்டே’ புயல் சேத மதிப்பீடு பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. மேலும் 2 நாட்களில் இந்த பணி முடிவடையும். மத்திய அரசின் விதிமுறைகளின்படி உதவி கோரப்படும்.
அதிகபட்ச நிவாரண உதவியை வழங்குமாறு நாங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம். பிரதமர் நரேந்திர மோடி உணர்வுடையவர். நாங்கள் இதில் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.