மாடு மேய்க்க சென்றபோது தந்தை கண் முன் மின்னல் தாக்கி பிளஸ்-1 மாணவன் சாவு

மாடு மேய்க்க சென்றபோது தந்தை கண் முன் மின்னல் தாக்கி பிளஸ்-1 மாணவன் பரிதாபமாக இறந்தான்.;

Update: 2021-05-22 10:31 GMT

கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் 12-வது வார்டு ஜோத்துகவுடர் தெருவை சேர்ந்த மாயக்கண்ணன் மகன் பாலபிரகதீஸ் (வயது 16). இவன் தேனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். கொரோனா பரவல் காரணமாக தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் பாலபிரகதீஸ் கூடலூரில் உள்ள வீட்டில் இருந்தான். 
இவர்களுக்கு சொந்தமாக மாடுகள் உள்ளன. இந்த மாடுகளை மாயக்கண்ணன் தினசரி மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்ப அழைத்து வருவது வழக்கம். 
மின்னல் தாக்கி சாவு
இந்தநிலையில் பாலபிரகதீஸ் மாடுகளை மேய்க்க தந்தைக்கு உதவியாக உடன் சென்று வந்தார். அதன்படி நேற்று மாடுகளை மேய்ப்பதற்காக தந்தை மாயகண்ணனுடன் கூடலூர் அரசு விதைப்பண்ணை சாலையில் தாமரைகுளம் வயக்காட்டு பகுதியில் நின்று கொண்டு இருந்தான். அப்போது திடீரென்று பாலபிரகதீசை மின்னல் தாக்கியது. இதில் அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். மாயக்கண்ணன் காயமின்றி தப்பினார்.
இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தந்தை கண் முன் மின்னல் தாக்கி மகன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்