சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சேலம்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30-வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அனைத்து அரசு அலுவலகங்களிலும் தீவிரவாத எதிர்ப்பு தினமாக அனுசரித்து அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதன்படி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதற்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கீதப்பிரியா தலைமை தாங்கினார். இதில், 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில், பங்கேற்ற அனைத்து அதிகாரிகளும், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு நின்று உறுதிமொழி ஏற்றனர்.
இதேபோல் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.