சேலம் இரும்பாலை வளாகத்தில் மேலும் 500 படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம்

சேலம் இரும்பாலை வளாகத்தில் மேலும் 500 படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2021-05-21 22:27 GMT
சேலம்:
சேலம் இரும்பாலை வளாகத்தில் மேலும் 500 படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
முதல்-அமைச்சர் 
சேலம் இரும்பாலை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது அவர் கொரோனா சிகிச்சை மையத்தை விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், இங்கு இன்னும் 10 நாட்களுக்குள் கூடுதலாக 500 படுக்கை வசதிகளை ஏற்படுத்தி இந்தியாவிலேயே முதன்மையான கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற வேண்டும் என உத்தரவிட்டார். 
ஆலோசனை கூட்டம்
அதன் அடிப்படையில் இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர் பார்த்திபன் எம்.பி., சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. வக்கீல் ராஜேந்திரன், பா.ம.க எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் உத்தரவுபடி இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதி கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தை மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு கூடுதலாக 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.தொடர்ந்து நடந்த கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:- 
கண்காணிப்பு குழுக்கள்
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,583 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2,896 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 2,270 படுக்கைகளும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 600 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு நிலையிலான அலுவலர்களை கொண்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி 10 நாட்களுக்குள் இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதி கொண்ட சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும். இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரே இடத்தில் 1000 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு இந்தியாவிலேயே முதன்மையான சிறப்பு சிகிச்சை மையமாக உருவாக்கப்பட உள்ளது. 
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார். 
ஆய்வு
தொடர்ந்து அவர் கூடுதலாக 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். முன்னதாக நடந்த கூட்டத்தில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சேலம் உதவி கலெக்டர் மாறன், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வள்ளி சத்தியமூர்த்தி, மாநகராட்சி நகர் நல அலுவலர் பார்த்திபன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்