தாளவாடி அருகே வாழை தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்
தாளவாடி அருகே வாழை தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன.
தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட திகனாரை கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 43). விவசாயி. இவரது வீட்டையொட்டி தோட்டம் உள்ளது. இங்கு அவர் 3 ஏக்கர் பரப்பளவில் கதலி வாழை சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை மணி தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது வாழைகள் நாசப்படுத்தப்பட்டு கிடந்தன. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள், தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது தெரியவந்தது. இதில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 1 ஏக்கர் பரப்பளவிலான வாழைகள் சேதம் அடைந்தன.
இதுபற்றி மணி தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது வனத்துறையினரிடம் விவசாயிகள், வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும், அகலமாகவும் அகழி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.