பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி; வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்
பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் டாக்டர்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.;
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் கும்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசந்திரசேகர் (வயது 48). இவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்து வருகிறார்.எம்.ஏ.அரசியல் விஞ்ஞானம் மற்றும் சட்டப்படிப்பு முடித்து வக்கீலாகவும் பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பொன்னேரி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கொரோனா உறுதி
இந்தநிலையில், கொரோனா தடுப்பு பணியாக இவர் கடந்த வாரம் மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொன்னேரி, பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். கொரோனா முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இவருக்கு கடந்த 4 தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர், சென்னை அண்ணாநகரில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரியில் பரிசோதித்ததில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர், டாக்டர்கள் ஆலோசனைப்படி, தற்போது தான் வசித்து வரும் சென்னை அண்ணாநகர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிகிறது.