2-வது நாளாக சூறைக்காற்றுடன் மழை மின்னல் தாக்கி பாத்திரக்கடைக்காரர் சாவு

கடலூர் மாவட்டத்தில் 2 வது நாளாக சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் வடலூரில் மின்னல் தாக்கி பாத்திரக்கடைக்காரர் உயிரிழந்தார்.

Update: 2021-05-21 20:43 GMT
கடலூர்,

2-வது நாளாக மழை

கடலூர்  மாவட்டத்தில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயில் மந்தமாக இருந்தது. மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து, சூறைக்காற்றுமற்றும் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இந்த மழை சுமார் 30 நிமிடம் நீடித்தது. 
இதனால் கடலூரில் தாழ்வான பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக கடலூர் நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் பண்ருட்டி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பிற பகுதியிலும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. 
வடலூரில் மின்னல் தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

பாத்திரக்கடைக்காரர் சாவு

வடலூரை சேர்ந்தவர் கண்ணதாசன் மகன் ராமலிங்கம் (வயது 32). இவர் வடலூரில் பாத்திரக்கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று இரவு 7.30 மணியளவில் ராமலிங்கம் வடலூர் சத்திய ஞானசபை அருகில் செல்போன் பேசி கொண்டு இருந்தார். அப்போது மின்னல் அவர்  மீது தாக்கியது. இதில் உடல்கருகிய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இது குறித்து தகவலறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராமலிங்கம் உடலை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மழை அளவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
சேத்தியாத்தோப்பு...............100
சிதம்பரம்................................62.8
பண்ருட்டி.................................56
லால்பேட்டை.....................32.8
மேமமாத்தூர்..........................28
விருத்தாசலம்...........................28
குடிதாங்கி...............................27.5
பரங்கிப்பேட்டை................19.8
வானமாதேவி...........................17
வேப்பூர்.........................................6
லக்கூர்........................................14.1
அண்ணாமலை நகர்.........12.8
காட்டுமன்னார்கோவில்..12 
குப்பநத்தம்..............................10.4
கடலூர்........................................10
காட்டுமைலூர்.........................10
ஸ்ரீமுஷ்ணம்.............................9.3
புவனகிரி.......................................7
தொழுதூர்...................................7
கீழச்செருவாய்...........................5
கொத்தவாச்சேரி......................4
பெலாந்துறை..........................3.8
குறிஞ்சிப்பாடி...........................2

மேலும் செய்திகள்