ஈரோட்டில் விசைத்தறிகள் மூடல்: 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பு

ஈரோட்டில் விசைத்தறிகள் மூடப்பட்டு உள்ளதால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.;

Update:2021-05-22 02:02 IST
ஈரோட்டில் விசைத்தறிகள் மூடப்பட்டு உள்ளதால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
ரூ.250 கோடி துணிகள் தேக்கம்
ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. 
இங்கு நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி,  கொல்கத்தா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் வெளி மாநிலங்களில் இருந்து ஈரோடு பகுதிக்கு ஆர்டர் கிடைப்பது பாதிக்கப்பட்டது. 
மேலும் கடந்த 42 நாட்களாக வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் ரூ.250 கோடி    மதிப்பிலான துணிகள்    தேக்கமடைந்து  உள்ளன.
உற்பத்தி நிறுத்தம்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 
இதன் காரணமாக விசைத்தறிகளில் உற்பத்தி 50 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டு இயங்கியது.
இதனால் நாளொன்றுக்கு 12 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அதனால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர். 
தற்போது ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் விசைத்தறி உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து கடந்த 6-ந் தேதி முதல் முழு உற்பத்தியை நிறுத்தினர்.
50 ஆயிரம் தொழிலாளர்கள்
இதைத்தொடர்ந்து கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. 
இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள 50 ஆயிரம் விசைத்தறிகள் தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாமல் மூடப்பட்டு உள்ளது.
இந்த முழு உற்பத்தி நிறுத்தம் மூலம் நாளொன்றுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதோடு, இதனை நம்பி உள்ள 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். 
மேலும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும் செய்திகள்