திருச்சியில் ராஜீவ்காந்தி சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
திருச்சியில் ராஜீவ்காந்தி சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திருச்சி,
திருச்சியில் ராஜீவ்காந்தி சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கொரோனா தடுப்பு பணி
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று மதுரையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் திருச்சியில் ஆய்வு செய்வதற்காக அவர், காலை 11.15 மணிக்கு அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் திருச்சி புறப்பட்டார். பிற்பகல் 1.15 மணிக்கு, திருச்சி ஜங்சனுக்கு அவர் காரில் வந்திறங்கினார்.
ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 30-வது நினைவு நாள் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி, திருச்சி ஜங்சனில் நிறுவப்பட்டுள்ள ராஜீவ்காந்தி உருவச்சிலைக்கு, அரசு சார்பில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சிலையின் அடியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கும் அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர் கல்லுக்குழி பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகைக்கு அவர் புறப்பட்டு சென்றார். நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருநாவுக்கரசர் எம்.பி. மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.