கிராமங்களில் கொரோனா பரவலை தடுக்க சிறப்பு குழுக்கள் மூலம் கண்காணிப்பு- வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை
நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கொரோனா பரவலை தடுக்க சிறப்பு குழுக்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
நெல்லை, மே:
நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சிறப்பு குழுக்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
கொரோனா தொற்று
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. அதன் தாக்கம் நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து காணப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் கூறியதாவது:-
சிறப்பு குழுக்கள்
நெல்லை மாவட்ட ஊரக பகுதிகளில் 204 ஊராட்சிகள் உள்ளன. அதில் 1,337 குக்கிராமங்கள் அமைந்துள்ளன. தற்போது கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், கிராம பொதுமக்களை பாதுகாத்திட ஒவ்வொரு ஊராட்சியிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு குழுவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பணி மேற்பார்வையாளர்கள், அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் இடம்பெற்று உள்ளனர்.
இந்த குழுவினர் ஒரு ஊராட்சியில் உள்ள 5 அல்லது 6 குக்கிராமங்களில், சுகாதார துறையினருடன் இணைந்து கொரோனா பரவலை தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு கிராமத்தில் வசிக்கும் நபர் ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர் இந்த குழுவினரால் தனிமைப்படுத்தப்படுவார். மேலும் பாதிக்கப்பட்டவர் வசித்த தெரு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படும்.
காய்ச்சல் பரிசோதனை
அந்த நபருக்கு தேவையான மருத்துவ உதவிகள், உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இருப்பின் அதனை இந்த சிறப்பு குழுவினரே ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்தையும் இந்த குழுவினரே செய்து வருகின்றனர். மேலும், இந்த குழுவினர் கிராமம் முழுவதும் வீடு, வீடாக சென்று அங்கு உள்ளவர்களுக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட ஏதேனும் பிரச்சினைகள் உள்ளனவா? என்று கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள 1,337 குக்கிராமங்களில், 414 கிராமங்களில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் 1 முதல் 4 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கூடும் இடங்களான ரேஷன் கடை, மார்க்கெட், மளிகை கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் காலையிலும், மாலையிலும் சுகாதாரத்துறையுடன் இணைந்து இந்த குழுவினர் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தீவிர கண்காணிப்பு
நெல்லையையொட்டி உள்ள கீழநத்தம் மற்றும் வள்ளியூர், ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. அந்த பகுதிகளில் இந்த குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கிராம பகுதிகளிலும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை உதவி திட்ட இயக்குனர் அடங்கிய குழுவினர் மாவட்ட கலெக்டரிடம் அறிக்கையாக சமர்ப்பித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் வள்ளியூர், ராதாபுரம், வடக்கன்குளம், கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மக்களிடம் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.