பனை மரம் சாய்ந்ததில் 3 மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன
காரைபாக்கத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தபோது பனைமரம் சாய்ந்து மின்கம்பிகள் மீது விழுந்ததில் 3 மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன.
கீழப்பழுவூர்:
மின்கம்பங்கள் உடைந்தன
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காரைபாக்கம் கிராமத்தில் மெயின் ரோட்டிற்கு அருகிலேயே கொள்ளிடக் கரையில் 50-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
அப்போது சுமார் 80 அடி உயர பனை மரம் ஒன்று அடியோடு சாய்ந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் தொடர்ச்சியாக இருந்த 3 மின் கம்பங்கள் அடியோடு உடைந்து குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்கு முன்பு விழுந்தது. இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் உடனடியாக சத்தம்போட்டு, அருகே உள்ள வீடுகளில் வசிப்போரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரித்தனர்.
சீரமைப்பு பணி
மேலும் மின்வாரிய அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டு மின்சாரத்தை துண்டிக்க செய்தனர். இதனால் உயிர்ச்சேதம் மற்றும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து நேற்று மின்வாரிய ஊழியர்களால் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, மின்கம்பங்கள் அகற்றப்பட்டது. பின்னர் புதிதாக மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.