சட்டவிரோத மது விற்பனை படுஜோர்

ஜெயங்கொண்டம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை படுஜோராக நடக்கிறது. வருமானமற்ற நிலையிலும் தொழிலாளர்கள் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி, கையில் இருக்கும் பணத்தை இழக்கின்றனர்.

Update: 2021-05-21 19:55 GMT
ஜெயங்கொண்டம்:

சட்டவிரோத மது விற்பனை
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த 10-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் அதற்கு முதல் நாளே டாஸ்மாக் கடைகளில் பெட்டி, பெட்டியாக மது பாட்டில்களை சிலர் வாங்கிச்சென்று தங்கள் வீடுகளில் பதுக்கி வைத்தனர். தற்போது அந்த மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், சின்னவளையம், கீழக்குடியிருப்பு, மேலக்குடியிருப்பு கீழத்தெரு, மலங்கன்குடியிருப்பு, வேலாயுதநகர், கரடிகுளம், அங்கராயநல்லூர், உத்திரக்குடி, கல்லாத்தூர், வடவீக்கம், தண்டலை உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ரூ.120 குவார்ட்டர் ரூ.500 வரை விற்பனை
மேலும் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் பலரும் மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் வாகனங்களில் ‘டோர் டெலிவரி’யும் செய்து வருகின்றனர். இதில் டாஸ்மாக் கடையில் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட குவார்ட்டர் ரூ.350-க்கும், ரூ.140 விலையுள்ள குவார்ட்டர் ரூ.450 முதல் ரூ.500 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. ஆரம்ப நாட்களில் இருந்த இந்த விலை மேலும் ஏற்றப்பட்டு, நேற்று முன்தினம் முதல் ரூ.120 விலையுள்ள குவார்ட்டர் ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.
வேலை மற்றும் வருமானம் இல்லாத நிலையிலும் கூலி தொழிலாளர்கள் பலர் அதிக விலைக்கு இந்த மது பாட்டில்களை வாங்கி, தங்களிடம் இருந்த பணத்தை இழந்து வருகின்றனர். மேலும் பலர், மனைவியிடம் சண்டை போட்டு வீட்டில் உள்ள பாத்திரங்களையும், நகைகளையும் அடமானம் வைத்து குடிக்கும் அளவிற்கு மதுப்பிரியர்களின் நிலை மாறியுள்ளது. மது குடித்த சிலர் குடும்பத்தில் தகராறு செய்து மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்காதது ஏன்?
இவ்வாறு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் தகவல் தெரிந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் போலீசாரால் எடுக்கப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதனால் படுஜோராக மது விற்பனை நடப்பதால், மதுபாட்டில்கள் விற்பவர்கள் ஒளிவு, மறைவின்றி முடிந்த அளவு கல்லா கட்டி வருகின்றனர். டீ கேன்களில் டீ விற்கும் தொழிலாளர்களை துரத்தி துரத்தி பிடிக்கும் போலீசார், பதுக்கி வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், மதுப்பிரியர்களின் குடும்பத்தினரும் கேள்வி எழுப்பி உள்ளனர். குடியால் குடும்பம் கெட்டு குட்டிச்சுவர் ஆனதாக பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்