சாலைகளில் தேவையின்றி சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
சாலைகளில் தேவையின்றி சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் பகுதிகளில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்ற வேண்டாம் என்று போலீசார் தினமும் கடை வீதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் விதிமுறைகளை மதிக்காமல் தேவையின்றி தினமும் வெளியே சுற்றித்திரிகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஷகிராபானு, சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்தகுமார், காதர்கான் உள்ளிட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் சாலைகளில் சுற்றித்திரிபவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திய போலீசார் உரிய காரணங்களுக்காக செல்பவர்களை மட்டுமே அனுப்பி வைத்தனர். தேவையின்றி சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, பணம் வசூல் செய்யப்பட்டது. மேலும் முககவசம் அணியாமல் வந்தவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை என மொத்தம் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். தொடர்ந்து போலீசார் அபராதம் விதித்து வருவதால் வெளியே சுற்றுபவர்களின் எண்ணிக்கை குறையும். இதனால் நோயும் கட்டுப்படும் என்று கூறப்படுகிறது.