மதுரைக்கு சரக்கு ரெயிலில் வந்த திரவ ஆக்சிஜன்

திரவ ஆக்சிஜன் நேற்று சரக்கு ரெயிலில் வந்தது. பின்னர் பல்வேறு இடங்களுக்கு ஆக்சிஜன் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2021-05-21 19:43 GMT
மதுரை, மே.
திரவ ஆக்சிஜன் நேற்று சரக்கு ரெயிலில் வந்தது. பின்னர் பல்வேறு இடங்களுக்கு ஆக்சிஜன் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
திரவ ஆக்சிஜன்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறலால் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் ரெயில்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி, ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரிகளை ஏற்றிய சரக்கு ரெயில் நேற்று மதுரை வாடிப்பட்டிக்கு வந்தது. 
இந்த ரெயிலில், 5 டேங்கர் லாரிகள் 79.31 டன் திரவ ஆக்சிஜனை ஏற்றி வந்தன. ஏற்கனவே, கடந்த 18-ந் தேதி 78.82 டன் ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் சரக்கு ரெயில் மூலம் தூத்துக்குடி வந்தது. இவை அந்த பகுதியை சேர்ந்த தென் மாவட்ட ஆஸ்பத்திரிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது. தற்போது, வந்துள்ள ஆக்சிஜன் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாவட்டங்களுக்கு வினியோகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
பிரித்து அனுப்பி வைப்பு
இதில், மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு 23 டன் ஆக்சிஜனும், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு 6 டன் ஆக்சிஜனும் வழங்கப்பட்டுள்ளது. 
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 6 டன் ஆக்சிஜனும், சிவகங்கை மாவட்டத்துக்கு 6 டன் ஆக்சிஜனும் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்துக்கு சுமார் 5 டன், கரூர் மாவட்டத்துக்கு 7 டன், நாமக்கல் மாவட்டத்துக்கு 3 டன், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சுமார் 10 டன், தேனி மாவட்டத்துக்கு 7 டன் ஆக்சிஜன் பிரித்து வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்கள் ஆய்வு
முன்னதாக வாடிப்பட்டி ெரயில் நிலையத்திற்கு வந்த ஆக்சிஜன் லாரிகளை  அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வெங்கடேசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், தளபதி, பூமிநாதன், கொரோனா தடுப்பு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன், மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர்  ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஆர்.டி.ஓ. முருகானந்தம், தாசில்தார் பழனிக்குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்