மயிலாடுதுறை பெண்ணுக்கு கண் அகற்றம்

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறையை சேர்ந்த பெண்ணுக்கு சென்னை மருத்துவமனையில் கண் அகற்றப்பட்டது. மருத்துவ செலவுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-05-21 19:06 GMT
மயிலாடுதுறை:
கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறையை சேர்ந்த பெண்ணுக்கு சென்னை மருத்துவமனையில் கண் அகற்றப்பட்டது. மருத்துவ செலவுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருப்பு பூஞ்சை தொற்று
மயிலாடுதுறை சேந்தங்குடி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் முத்து. இவர் சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனா (வயது 45). இவர் சீர்காழி கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுனராக உள்ளார். கடந்த மாதம் 12-ந் தேதி மீனா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
குணமடைந்து வீடு திரும்பிய 6 நாட்கள் கழித்து மீனாவுக்கு இடது கண்ணில் பார்வை குறைவுடன் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் மீனாவுக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 14-ந்தேதி அவரது இடது கண் மற்றும் மேல் கண்ணத்தில் சில பகுதிகள் அகற்றப்பட்டு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மயிலாடுதுறையில் மீனாவின் கணவர் முத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கண் அகற்றம்
கடந்த மாதம் 12-ந் தேதி எனது மனைவி மீனா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது, மீனா கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 நாட்களில் கண்ணை அகற்றிவிட வேண்டும், இல்லை என்றால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது மீனா கண் அகற்றப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
நிவாரணம் வழங்க வேண்டும்
மருத்துவ சிகிச்சைக்கு இதுவரை ரூ.9 லட்சம் செலவாகியுள்ளது. இன்னமும் ரூ.5 லட்சம் செலவாகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு செலவு செய்ய எங்களிடம் வசதியும் இல்லை.
இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலருக்கு மனு அளித்துள்ளோம். எனவே, எங்களது கோரிக்கையை பரிசீலித்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் மீனாவை காப்பாற்ற நிவாரணம் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்