மத்தூர் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு வராத ஆக்சிஜன் படுக்கைகள்
பயன்பாட்டிற்கு வராத ஆக்சிஜன் படுக்கைகள்
மத்தூர்:
மத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளன.
சிறப்பு சிகிச்சை வார்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பிற்கு முன்பு வரை இங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 300 புறநோயாளிகள் வருகை தருவார்கள்.
3 அரசு மருத்துவர்கள், மகப்பேறு பிரிவு, சித்தா பிரிவு, உடற்கூறு ஆய்வு பிரிவு என பல்வேறு பிரிவுகளுடன் செயல்படும் இந்த மருத்துவமனையில் ஏற்கனவே உள்ள 40 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை பிரிவிற்காக கூடுதலாக 30 படுக்கைகளுடன் சிறப்பு சிகிச்சை வார்டு உருவாக்கப்பட்டது.
ஆக்சிஜன் வசதி
இந்த கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவிற்காக தொடங்கப்பட்ட 30 படுக்கைகளில் வென்டிலேட்டர் வசதி இல்லாத ஆக்சிஜன் வசதி உள்ளது. சாதாரண நிலையில் அனுமதிக்கப்படும் மூச்சுத்திணறல் லேசாக உள்ள நோயாளிகளுக்கு இந்த ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் சிகிச்சை அளிக்க போதுமானது என கூறப்படுகிறது.
ஆனால் மத்தூர் அரசு மருத்துவமனையில் இதுவரை ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளில் எந்த ஒரு நோயாளியும் அனுமதிக்கப்படவில்லை.
பணியாளர்கள் இல்லை
இந்த நிலை குறித்து சுகாதாரத்துறை வட்டாரங்களில் கேட்டபோது, போதுமான அளவு பணியாளர்கள் இல்லாததால் இந்த கொரோனா சிறப்பு படுக்கைகளில் நோயாளிகளை அனுமதிக்கவில்லை, என்றனர்.
கொரோனா பாதிப்புள்ள நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களில் நிரம்பி வருகின்றனர். படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி இல்லாததால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் உயிருக்கு போராடுவதை அறிந்து கொண்டிருக்கிறோம்.
பயன்பாட்டுக்கு வருமா?
இந்த நிலையில் மத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன. எனவே இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பொதுமக்கள் பயன் அடை செய்ய வேண்டும், என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.