ராஜீவ் கொலை வழக்கு கைதிகளுக்கு தனிச்சலுகை என்பதை ஏற்க முடியாது-கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி

ராஜீவ் கொலை கைதிகளுக்கு தனி சலுகை என்பதை ஏற்க முடியாது என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

Update: 2021-05-21 18:37 GMT
காரைக்குடி,

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முதலில் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசிகளை 2 கட்டங்களாக போட்டுக்கொள்ள வேண்டும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையை பற்றி பெருமையாக சிலர் பேசி வருகின்றனர். அவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்றுவிட்டார்கள். எனவே உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் பேசி வருகின்றனர். முதலில் அவர்கள் இதை எண்ணிப்பார்க்க வேண்டும். இந்திய நாட்டின் பிரதமராக இருந்து பல்வேறு சாதனைகளை படைத்த ராஜீவ்காந்தியின் படுகொலை என்பது அனைவரும் மறக்க முடியாத துயர சம்பவம்.
இந்த சம்பவத்தில் ராஜீவ்காந்தி மட்டும் கொலை செய்யப்படவில்லை. அவருடன் இளையான்குடி பகுதியைச் சேர்ந்த இக்பால் என்ற காவல்துறை அதிகாரியும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முனுசாமி மற்றும் கோகிலா உள்ளிட்ட 16 பேர் கொலை செய்யப்பட்டனர். இதையும் நினைத்து பார்க்க வேண்டும்.
எனவே இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை சட்ட ரீதியாக குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்த பிறகு அவர்களை ஹீரோவாக பார்க்கக்கூடாது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று அவர்கள் தான் குற்றவாளிகள் என தீர்ப்பு வந்து தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 7 குற்றவாளிகளுக்கு மட்டும் தனி சலுகை மற்றும் தனி பரிந்துரை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்ட ரீதியாக அரசோ அல்லது நீதிமன்றமோ இந்த விஷயத்தில் முடிவு செய்தால் அதை நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை.
 இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்