தொற்று பரவுவதை தடுக்க கொரோனா இடைநிலை கவனிப்பு மையம்

தொற்று பரவுவதை தடுக்க கொரோனா இடைநிலை கவனிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2021-05-21 17:46 GMT
பொள்ளாச்சி

தொற்று பரவுவதை தடுக்க கொரோனா இடைநிலை கவனிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

படுக்கை வசதிகள் 

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க பொள்ளாச்சியில் கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இந்த மையங்களில் சாதாரண அறிகுறி உள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இணை இயக்குனர் ஆய்வு 

இந்த நிலையில் பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா இடைநிலை கவனிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை சுகாதார பணிகள் இணை இயக்குனர் நிர்மல்சன்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது போலியோ கண்காணிப்பு அலுவலர் வேலன், நகராட்சி நகர்நல அலுவலர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர் ஜெயபாரதி ஆகியோர் உடன் இருந்தனர். 

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

இடைநிலை கவனிப்பு மையம்

பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவு உள்ள நபர்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு கொரோனா இடைநிலை கவனிப்பு மையம் அமைக்கப் பட்டு உள்ளது.

இந்த மையத்தில் லேசான அறிகுறி உள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே கொரோனா பரவாமல் கட்டுப்படுத்த முடியும். 

தேவைப்படும் நபர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்