குமரியில் 84 குழந்தைகள் உள்பட 1,129 பேருக்கு கொரோனா
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 84 குழந்தைகள் உள்பட 1,129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 84 குழந்தைகள் உள்பட 1,129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது.
1,129 பேர் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையினரும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஆனாலும் குமரி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு குறைந்த பாடில்லை.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,129 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேர் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். குமரி மாவட்டத்தை சேர்ந்த 1,119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பகுதிவாரியாக விவரம்
இந்த 1,129 பேரில் ஆண்கள் 584 பேரும் பெண்கள் 545 பேரும் அடங்குவர். இதில் 84 சிறுவர்களும் சிகிச்சை பெறுகிறார்கள். அதிகபட்சமாக நாகர்கோவில் நகரில் 325 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
மேலும் அகஸ்தீஸ்வரம் பகுதியில் 129 பேரும், கிள்ளியூர் பகுதியில் 57 பேரும், குருந்தங்கோடு பகுதியில் 105 பேரும், மேல்புறம் பகுதியில் 60 பேரும், முன்சிறை பகுதியில் 38 பேரும், ராஜாக்கமங்கலம் பகுதியில் 100 பேரும், திருவட்டார் பகுதியில் 101 பேரும், தோவாளை பகுதியில் 97 பேரும், தக்கலை பகுதியில் 107 பேரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
ஒரே நாளில் 18 பேர் சாவு
மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 567 ஆக உயர்ந்து, 40 ஆயிரத்தை நெருங்கியது.
அதே சமயம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 18 பேர் இறந்தனர். இதனால் குமரி மாவட்டத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 733 ஆக உயர்ந்துள்ளது.
தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரையில் கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக 98 ஆயிரத்து 518 பேரும், இரண்டாம் கட்ட தடுப்பூசி 41 ஆயிரத்து 934 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரத்து 452 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.