சொந்த ஊரில் நடந்த தடுப்பூசி முகாமிற்கு எம்.எல்.ஏ.வுக்கு அழைப்பு இல்லை
முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.வின் சொந்த ஊரில் நடந்த தடுப்பூசி முகாமிற்கு அவரை அழைக்காததால், நேரடியாக சென்று எச்சரிக்கை விடுத்தார்.
ஆரணி
தடுப்பூசி முகாம்
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆரணியை அடுத்த சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் எஸ்.வி. நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுதா தலைமையில் தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக் குமாரசாமி தொடங்கி வைத்தார்.
எம்.எல்.ஏ.வுக்கு அழைப்பு இல்லை
இந்த தடுப்பூசி முகாம் குறித்து ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரனுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கப்படவில்லை. முகாம் நடப்பது குறித்து தகவல் அறிந்ததும் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. முகாம் நடந்த இடத்துக்கு சென்றார்.
அங்கிருந்த அதிகாரிகளிடத்தில், முகாம் நடத்த வேண்டும் என்றால் முன்கூட்டியே ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்து, தண்டோரா போட்ட பிறகுதான் இது போன்ற முகாம் நடத்த வேண்டும். இல்லையென்றால் மக்களுக்கு பயனளிக்காது என்று அதிகாரியிடம் வலியுறுத்தினார். மேலும் அரசு நிகழ்ச்சிகளுக்கு கண்டிப்பாக என்னை அழைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் எச்சரித்தார்.