கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் குழாயை அகற்றியதால் கொரோனா நோயாளி இறக்கவில்லை கலெக்டர் பாலசுப்பிரமணியம் விளக்கம்

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் குழாயை அகற்றியதால் கொரோனா நோயாளி இறக்கவில்லை என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-21 17:21 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் ராஜா (வயது 49). கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 8-ந் தேதி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தனி வார்டில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ராஜா திடீரென இறந்தார். அவரது முகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் குழாயை டாக்டர் அகற்றியதால்தான் ராஜா உயிரிழந்ததாக, அவரது மனைவி குற்றஞ்சாட்டினார். 

மேலும் இது தொடர்பாக அவர் கதறி அழுதபடி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேற்று காலை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா நோயாளியிடம் இருந்து ஆக்சிஜன் வினியோகம் பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினோம். அதன் அடிப்படையில் பார்த்தால் அவர் கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

அவருக்கு 80 சதவீதம் பாதிப்பு உள்ளது. நேற்று (அதாவது நேற்று முன்தினம்) காலை 9.30 மணிக்கு ராஜா சாப்பிடுவதற்காக, அவரது முகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் குழாய் அகற்றப்பட்டுள்ளது.

மாரடைப்பால் சாவு 

அந்த சமயத்தில் வேறு ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தும் பணி நடைபெற்று வந்துள்ளது. நீண்ட நாட்களாக மருத்துவமனையில் இருந்ததால் ராஜாவுக்கு, மாரடைப்பு வந்துள்ளது. இதனால், தான் அவர் இறந்துள்ளார். மற்றபடி ஆக்சிஜன் வினியோகம் இல்லாமல் இறக்கவில்லை.

மேலும் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வினியோகத்தை அதிகப்படுத்திட அரசிடம் கேட்டுள்ளோம். அது கிடைத்தால் கூடுதலாக 60 ஆக்சிஜன் படுக்கைகளாக மாற்ற முடியும்.

கூடுதல் படுக்கைகள்

விருத்தாசலம், சிதம்பரம் அரசு மருத்துவமனைகளில் உள்ள சிலிண்டர்களில் ஆக்சிஜன் ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடலூர் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சேமித்து வைத்து வினியோகம் செய்யப்படுகிறது. 

சிதம்பரத்தில் 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கலன் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கும், கூடுதலாக ஆக்சிஜன் வினியோகிக்க அரசிடம் கேட்டுள்ளோம். அது கிடைத்தால் கூடுதலாக 250 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். 

ஆய்வு

முன்னதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய படுக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அதனை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியின் பின்புறம் உள்ள 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா, கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய்லீலா உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்