திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய உச்சமாக 726 பேருக்கு கொரோனா தொற்று
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய உச்சமாக 726 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
கொரோனா தொற்று
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் இந்நோய் தொற்றின் தாக்கத்ைத குறைக்க ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கோவிட் கேர் சென்டர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய் தொற்றினால் அச்சத்தில் உள்ள மக்கள் காய்ச்சல், சளி போன்ற உடல் நல குறைபாடுகள் ஏற்பட்டவுடன் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர்.
726 பேர் பாதிப்பு
மேலும் உடல் உள்உறுப்புகளில் பாதிப்புகள் ஏதேனும் உள்ளதா என்று ஸ்கேன் செய்தும் பார்க்கின்றனர். இதனால் திருவண்ணாமலை நகரத்தில் உள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் சென்டர்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது நேற்று ஒரே நாளில் 726 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். 294 பேர் குணமடைந்து உள்ள வீடு திரும்பி உள்ளனர்.