உதவுவதுபோல் நடித்து நகை,பணம் திருட்டு
உதவுவதுபோல் நடித்து நகை,பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் காந்தாரிஅம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கார்மேகம் மகன் கண்ணன் (வயது41). இவர் தனது மனைவி கார்த்திகயானி (31) மகள் ஹன்சிகா (1) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரம் அருகே தென்றல்நகர் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த வாகனம் மோதி தூக்கிவீசப்பட்டனர். இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தின்போது கீழே விழுந்தவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தூக்கி விட்டு உதவி செய்துள்ளனர். அப்போது மர்ம நபர் உதவுவதுபோல் நடித்து கண்ணன் வாகனத்தில் வைத்திருந்த பையில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் ½ பவுன் தங்க சங்கிலி, 2 கிராம் தங்க மோதிரம், 2 ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடி சென்று விட்டான். படுகாயம் அடைந்த கண்ணன் உள்ளிட்ட 3 பேரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.