விழுப்புரம் மாவட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு

விழுப்புரம் மாவட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Update: 2021-05-21 16:05 GMT
விழுப்புரம், 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசியான கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள், பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், நகர்புற சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 75 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை கோவிஷீல்டு முதல்முறை தடுப்பூசியை 92,489 பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களில் 2-ம் முறை தடுப்பூசியை 28,403 பேர் செலுத்தியுள்ளனர். அதேபோல் கோவேக்சின் முதல்முறை தடுப்பூசியை 6,630 பேர் செலுத்திக்கொண்டுள்ள நிலையில் இவர்களில் 2-ம்முறை தடுப்பூசியை 2,942 பேர் செலுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் இதுவரை 1,30,464 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது மாவட்ட சுகாதார கிடங்கில் 2,990 கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டும் இருப்பில் உள்ளன. ஆனால் கோவேக்சின் தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

பொதுமக்கள் ஏமாற்றம்

இந்த நிலையில் கோவேக்சின் முதல்முறை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பலருக்கு 2-ம்முறை தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான நாட்களை கடந்து விட்ட நிலையில் அவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக தடுப்பூசி மையங்களுக்கு தினந்தோறும் சென்று வருகின்றனர். ஆனால் கோவேக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள், அந்த தடுப்பூசியை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், மாவட்டத்தில் நாள்தோறும் தடுப்பூசி செலுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. கோவேக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து ஏற்கனவே மாநில சுகாதாரத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். இன்னும் ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்