துப்பாக்கிசூடு சம்பவம் 3வது ஆண்டை முன்னிட்டு தூத்துக்குடியில் 1200 போலீசார் குவிப்பு

தூத்துக்குடியில் துப்பாக்கிசூடு சம்பவம் 3வது ஆண்டை முன்னிட்டு, 1200 போலீசார் குவித்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-21 15:48 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கி சூடுசம்பவத்தின் 3-வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, இன்று(சனிக்கிழமை) தூத்துக்குடியில் 1,200 போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 3 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (சனிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்து. 
144 தடை உத்தரவு
கூட்டத்திற்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு 144 குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டப்படி தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்கள் யாரும் கூட்டம் கூடுவதற்கோ அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே வருவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
1200 போலீசார் பாதுகாப்பு
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 6 கூடுதல் போலீஸ்சூப்பிரண்டுகள்,  12 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 55 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவது என முடிவு செய்யப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
இக்கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, கார்த்திகேயன், இளங்கோவன், சீமைச்சாமி, சுந்தரம், சுவாமிநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் உட்பட பல போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்