சரக்கு ரெயிலில் மதுரை சென்ற ஆக்சிஜன் டேங்கர்கள்

திண்டுக்கல் வழியாக சரக்கு ரெயில் மூலம் ஆக்சிஜன் டேங்கர்கள் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன.

Update: 2021-05-21 15:24 GMT
திண்டுக்கல்: 


கொரோனா பாதிப்பு
கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 

முதல் அலையை விட 2-வது அலையில் கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் அதிகமாக உள்ளது. 

மேலும் அவர்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. 

இதனால் தினமும் கொரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. 

இதையடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் டேங்கர்கள் கொண்டுவரப்பட்டு ரெயில், லாரிகள் மூலம் நாடு முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது. 

அதன்படி ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரெயில் நிலையத்துக்கு சரக்கு ரெயில் மூலம் 5 ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டது.

ரெயில்வே போலீசார் சோதனை
இந்த ரெயில் நேற்று காலை 10.12 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார் சரக்கு ரெயிலில் வந்த ஆக்சிஜன் டேங்கர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

அப்போது டேங்கரில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்று சோதனையிட்டனர். அதன் பின்னர் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரெயில் புறப்பட்டு வாடிப்பட்டி நோக்கி சென்றது.


இதுகுறித்து ரெயில்வே போலீசாரிடம் கேட்ட போது, ஒடிசாவில் இருந்து சரக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்ட டேங்கர்களில் 40 டன் அளவு ஆக்சிஜன் உள்ளது.

 இந்த ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் வாடிப்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது என்றனர்.

மேலும் செய்திகள்