உடுமலையில் அதிகரிக்கும் வாகன போக்குவரத்து
உடுமலையில் அதிகரிக்கும் வாகன போக்குவரத்து
உடுமலை
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வேகமாக பரவிவருவதையொட்டி, அதை தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வரும் போது கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. முழு ஊரடங்கில் சில தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. அதன்படி மளிகைக்கடைகள், காய்கறிக்கடைகள் ஆகியவை காலை 6 மணிமுதல் 10 மணிவரை மட்டும் திறந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த நேரத்தில் உடுமலையில் கார்கள், இருசக்கர வாகனங்கள் போக்குவரத்து அதிகம் உள்ளது.ஊரடங்கு அமலில் உள்ளது போன்றே தெரியாத வகையில் தளிசாலை, பொள்ளாச்சி சாலை, பழனிசாலை, ராஜேந்திரா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவை அதிக அளவில் சென்று வருகின்றன. காலை 10மணிக்கு பிறகு இருசக்கர வாகனத்தில் செல்கிறவர்கள், போலீசாரின் எச்சரிக்கையை தொடர்ந்து அவசர, அவசரமாக வீடுகளுக்குசெல்கின்றனர்.அதன் பிறகு வாகன போக்குவரத்து குறைகிறது. கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மாலை நேரத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மத்திய பஸ்நிலையம், தளி சாலை-பொள்ளாச்சி சாலை சந்திப்பு, ராஜேந்திரா சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து சாலைகளிலும் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.