கடமலை-மயிலை ஒன்றிய அ.தி.மு.க. தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்கள் மனு
கடமலை-மயிலை ஒன்றிய அ.தி.மு.க. தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்கள் ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.-அ.தி.மு.க. தலா 7 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தமிழ்செல்வன் அ.தி.மு.க.வில் இணைந்தார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.கவை சேர்ந்த சந்திரா ஒன்றியக்குழு தலைவராக பதவி ஏற்றார்.
இதனிடையே அ.தி.மு.க.வில் இணைந்த தி.மு.க கவுன்சிலர் தமிழ்செல்வன் இறந்து விட்டார். இதனால் அ.தி.மு.க.வின் பலம் 7 ஆகவும், தி.மு.க. வின் பலம் 6 ஆகவும் குறைந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து கடமலை-மயிலை ஒன்றியம் 3-வது வார்டை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் சேகர் கடந்தவாரம் தி.மு.க.வில் இணைந்தார். இதைத்தொடர்ந்து தி.மு.க.வின் பலம் 7 ஆக உயர்ந்தது.
இந்தநிலையில் அ.தி.மு.க. தலைவர் சந்திரா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் தலைமையில் தி.மு.க ஒன்றியகவுன்சிலர்கள் பெரியகுளம் ஆர்.டி.ஓ. சினேகாவிடம் நேற்று மனு கொடுத்தனர். அப்போது இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ. கூறினார்.
இதனால், உள்ளாட்சி தேர்தல் முடிந்து 1½ ஆண்டு ஆன நிலையில் அ.தி.மு.க. வசமிருக்கும் கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவர் பதவி தி.மு.க வசம் செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.