மேட்டூர் அணை திறப்பு முன்கூட்டியே அறிவிக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

மேட்டூர் அணை திறப்பு முன்கூட்டியே அறிவிக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2021-05-21 14:10 GMT
திருக்காட்டுப்பள்ளி,

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குறுவை பாசனத்துக்கு இந்த ஆண்டு குறித்த நாளில் (ஜூன் மாதம் 12-ந் ேததி) மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க சாதகமான சூழல் உள்ளது. தற்போது மேட்டூர் அணையில் 97.58 அடி தண்ணீர் உள்ளது. நீர்வரத்து 1900 கன அடியாக உள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும், தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காவிரி நீரை பெற முயற்சி

இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்திற்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்றால் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டிவிடும்.

கர்நாடகத்தில் மழை பெய்து உபரி நீரை மட்டும் தமிழகத்துக்கு திறந்து விடும் நிலையை மாற்றி தமிழகத்துக்கு உரிய நீரை பெற அரசு முயற்சி எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன் தயாரிப்பு பணி

தஞ்சை மாவட்டம் கல்லணையின் தலைப்பு பகுதியாக உள்ள பூதலூர் வட்டாரத்தில் 27 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும். இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் ஏ.டி.டி.36 ரக நெல் ரகத்தை பயிரிட விரும்புகின்றனர்.

வேளாண் துறை இந்த ரக நெல் விதை விற்பனைக்கு இல்லை என்று தெரிவித்து கோ 51, ஏ.எஸ்.டி.16 ஆகிய ரகங்களே விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் ஏ.டி.டி.36 ரக நெல் விதைகளை வாங்க தனியார் வியாபாரிகளை தேடி செல்லும் நிலை உள்ளது. இதனிடையே திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் பகுதியில் ஏ.டி.டி.36 விதைநெல் இருப்பில் இல்லை என்று தனியார் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் வலியுறுத்தல்

இந்த நிலையில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவது குறித்து முன்கூட்டியே தெளிவாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். இதுதொடர்பாக தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. குறுவை சாகுபடி மேற்கொள்ள போதுமான விதைநெல், உரம் ஆகியவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கால்வாய் பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள் மேற்கொள்ளும் சாகுபடி பணிகளுக்கு ஏற்றவாறு இடுபொருட்களை திட்டமிட்டு வினியோகம் செய்ய வேண்டும் என்று பூதலூர் பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்