தரங்கம்பாடி தாலுகா பகுதியில் எந்திரம் மூலம் நாற்று நடும் பணியில் விவசாயிகள் தீவிரம்

தரங்கம்பாடி தாலுகா பகுதியில் எந்திரம் மூலம் நாற்று நடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2021-05-21 13:11 GMT
பொறையாறு,

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதியான பொறையாறு அருகே திருவிளையாட்டம், நல்லாடை கீழ்மாத்தூர், மேம்மாத்தூர், பரசலூர், செம்பனார்கோவில், காளகஸ்திநாதபுரம், கிடாரம்கொண்டான், ஆறுபாதி, விளநகர் இலுப்பூர், சங்கரன்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கோடை சாகுபடியான நெல் மற்றும் பருத்தி சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

கடந்த மாதம் காலகஸ்திநாதபுரம் பகுதியில் விவசாயிகள் பாய் நாற்றங்கால் அமைத்து இருந்தனர். தற்போது நாற்றுகள் நன்கு வளர்ந்து, நடவு செய்யும் பக்குவத்திற்கு வந்து பிறகு நேற்று இந்த பகுதியில் நடவு பணி எந்திரம் மூலம் நடைபெற்று வருகிறது. ஆட்கள் மூலமும் நடவு செய்யும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மண்ணின் வளம் பெருகும்

இதுகுறித்து விவசாயி ஜீவானந்தம் கூறுகையில், நெல், கோடை சாகுபடி செய்ய பாய் நாற்றங்கால் அமைத்து இருந்தோம். நாற்றுகள் நன்கு வளர்ந்து விட்ட நிலையில், தற்போது ஆழ்துளை கிணற்று நீர் மூலம் கோடை நடவு பணியில் ஈடுபட்டுள்ளோம். கோடை மழையை எதிர்நோக்கி உள்ளோம். கோடை மழை பெய்தால் நெல் மகசூல் அதிகரிக்கும்.

மேலும் விவசாயிகள் கோடை உழவு செய்வதால் மண்ணின் வளம் பெருகும். நீர் பிடிப்பு தன்மை அதிகமாகும். கூட்டுப்புழுக்கள் அழிந்து விடும். நிலத்தில் வேர்ப்பகுதி காற்றோட்டமாக இருக்கும். இதனால் நெற்பயிர்கள் செழித்து வளரும் என்றார்.

மேலும் செய்திகள்