தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறிய 2674 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கில் விதிகளை மீறிய 2674 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-05-21 11:43 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறி வெளியே சுற்றிய 2ஆயிரத்து674 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 433 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கையொட்டி தேவையில்லாமல் வெளியே செல்பவர்களை கட்டுப்படுத்தும் பணியில் 2 ஆயிரம்  போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முழுஊரடங்கை அமல் படுத்தும் விதமாக ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வி.வி.டி. சிக்னல் மற்றும் எப்.சி.ஐ ரவுண்டானா ஆகிய இடங்களில் போலீசாரின் பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
 அப்போது அந்த பகுதியில் அவசியம் இல்லாமல் வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்.
அப்போது, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது:-
2,674 பேர் மீது வழக்கு
தூத்துக்குடி மாவட்டத்தில் தேவையில்லாமல் வெளியே வந்தவர்கள் 2 ஆயிரத்து 674 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 412 இரு சக்கர வாகனங்களும், 20 ஆட்டோக்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உங்கள் மீது வழக்குப்போடுவதோ, உங்களது வாகனங்களை பறிமுதல் செய்வதோ காவல் துறையின் நோக்கமில்லை.
தடுப்பூசி போடுங்கள்
கொரோனா வைரஸை ஒழிக்க வேண்டும், பொதுமக்களாகிய உங்களை அதன் தாக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். எனவே பொதுமக்கள் தயவு செய்து முககவசம் அணியுங்கள், அடுத்தவர்களிடம் பேசும்போது முடிந்தவரை 2 முககவசம் அணியுங்கள், எந்த நேரத்தில் வெளியில் சென்றாலும் 6 அடி இடைவெளியை கடைபிடியுங்கள். கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.
 தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். கைகளை அவ்வப்போது கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்யுங்கள். நீங்கள் இதில் அலட்சியமாக இருக்க வேண்டாம். பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இந்த வைரஸை அழிக்க முடியும் என்பதை மனதில் கொண்டு செயலாற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கோபி, தலைமையிடத்து போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் உட்பட போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்