கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் 31-வது இடம் வகிக்கும் தேனி மாவட்டம்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் தேனி மாவட்டம் 31-வது இடம் வகிக்கிறது. எனவே தடுப்பூசி போடும் மையங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி:
நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 'கோவேக்சின்', 'கோவிஷீல்டு' ஆகிய 2 வகையான தடுப்பூசிகள் நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழகத்தில் சுமார் 73 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை 72 ஆயிரத்து 188 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 53 ஆயிரத்து 338 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். அவர்களில் 18 ஆயிரத்து 850 பேர் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு இருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து தமிழக அளவில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கையில் தேனி மாவட்டம் 31-வது இடத்தில் உள்ளது.
தடுப்பூசி மையங்கள்
தேனி மாவட்டத்தில் நேற்று நிலவரப்படி சுமார் 19 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் இருப்பு உள்ளன. இதில் 18 வயதில் இருந்து 44 வயது வரையுள்ளவர்களுக்கு செலுத்துவதற்காக சுமார் 17 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அம்மா மினி கிளினிக் என 80-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நேற்று நிலவரப்படி அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 12 இடங்களில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. எனவே, தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்ட நாட்களில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். எனவே, மீண்டும் கிராமப்புற பகுதிகளில் கூடுதல் தடுப்பூசி முகாம்கள் நடத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.