எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் 200 படுக்கைகள் அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்
சென்னை எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில், ஆக்சிஜன் வசதியுடன் 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
சென்னை,
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் மற்றும் ராயபுரத்தில் உள்ள டான் பாஸ்கோ மெட்ரிக் பள்ளியில் ஆக்சிஜன் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள 104 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், மாநகராட்சியின் சார்பில் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா பாதுகாப்பு மையங்களில் ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 745 எண்ணிக்கையிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் முயற்சியால் தனியார் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக இதுவரை 845 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெறப்பட்டு உள்ளன.
இந்த 1,590 ஆக்சிஜன் செறிவூட்டிகளை, மாநகராட்சி, பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, அரசு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனைக்கு 225, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு 113, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு 407, கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு 50, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைக்கு 135, கிங்ஸ் மருத்துவமனைக்கு 150, எழும்பூர் கண் மருத்துவமனைக்கு 18,
மணலி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 40, சென்னை வர்த்தக மையத்திற்கு 140, ஈஞ்சம்பாக்கம் மையத்திற்கு 112, மீனாட்சி என்ஜினீயரிங் கல்லூரி மையத்திற்கு 110, டான் பாஸ்கோ பள்ளி மையத்திற்கு 50, வேலம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி மையத்திற்கு 40 என மொத்தம் 1,590 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மொத்தம் 837 படுக்கைகள் உள்ளன. இவற்றில் ஏற்கனவே 100 படுக்கைகள் கொரோனா தொற்றால் பாதிப்படையும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்பொழுது மேலும் 100 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகும் 12 வயதிற்கு மேற்பட்டவர்களையும் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மொத்தமுள்ள 200 படுக்கைகளும் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடியவை. இவற்றில் 50 படுக்கைகள் குழந்தைகளுக்கும், 150 படுக்கைகள் பெரியவர்களுக்கும் கொரோனா சிகிச்சை அளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலரும், வணிக வரித்துறை முதன்மை செயலாளருமான எம்.ஏ.சித்திக், மத்திய சென்னை தி.மு.க எம்.பி. தயாநிதி மாறன், எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.