திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிளில் சென்றவரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்
திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிளில் சென்றவரின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்ததால் படுகாயம் அடைந்தார்.;
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 52). இவர், நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே பறந்து சென்ற காற்றாடி மாஞ்சா நூல் அவரது கழுத்தை அறுத்தது.
இதில் படுகாயம் அடைந்த பார்த்திபன், மோட்டார்சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து பார்த்திபனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பகுதியில் மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட்டது யார்? என்பது குறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுபோல் மாஞ்சா நூல் காற்றாடி பறக்க விடுவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கழுத்து அறுபட்டு படுகாயம் அடைகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
எனவே சென்னையில் மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிட போலீசார் தடைவிதித்து உள்ளனர். ஆனால் அதையும் மீறி இதுபோன்று பறக்கும் மாஞ்சா நூல் காற்றாடிகளால் மீண்டும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கழுத்து அறுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.