திருவள்ளூரில் ஊரடங்கு உத்தரவை மீறும் வாகனங்களை கண்காணிக்க ஆளில்லா விமானம்
திருவள்ளூரில் ஊரடங்கு உத்தரவை மீறும் வாகனங்கள் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்று வேகமாக பரவி தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நடைமுறையில் உள்ளது. காலை 10 மணி வரை மட்டுமே மளிகை கடை, காய்கறி கடை போன்ற கடைகள் திறந்து இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே சுற்றக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இருப்பினும் பொதுமக்கள் இதனை காற்றில் பறக்கவிட்டு தேவையில்லாமல் சுற்றி வருகின்றனர்.
இதை கண்காணிக்க நேற்று திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான காமராஜர் சிலை, சி.வி. நாயுடு சாலை, ஜெ.என் சாலை, போன்ற பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சண்முகபிரியா உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி தலைமையில் திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போக்குவரத்து போலீசார் ஆளில்லா விமானம் மூலம் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும் மணவாளநகர், ஒண்டிகுப்பம், மப்பேடு, வெள்ளவேடு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, மீஞ்சூர், சோழபுரம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை என 30 இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்து வாகனங்களை தீவிர சோதனை செய்தபிறகே உரிய அனுமதி இருந்தால் மட்டுமே உள்ளே நுழைய அனுமதித்தனர்.
இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் கொரோனா நோயை பரப்பும் வகையில் பொது இடங்களில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் சுற்றித்திரிந்த 943 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 1008 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1951 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தப்பட்டு பொது இடங்களில் அரசின் வழிமுறைகளை பின்பற்றாமல் முககவசம் அணியாமலும், காரணமின்றி வாகனத்தில் சுற்றி திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுடைய நலனுக்காகவும், அவர்களை் சார்ந்தவர்களின் நலனுக்காகவும், போலீசாருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கி அரசின் வழிமுறைகளை பின்பற்றி வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட போலீசார் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.