திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் போராட்டம்
குடிநீர் வழங்காததை கண்டித்து நேற்று பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருவண்ணாமலை
தண்ணீர் வரவில்லை
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 38-வது வார்டில் உள்ள வேடியப்பன் கோவில் 1 முதல் 3-வது தெரு, குறத்திபாறை, ராஜீவ்காந்தி நகர், வானதராய பாளையத்தெரு ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் அந்தப்பகுதியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியுடன் கூடிய ஆழ்துளை கிணறுகளில் உள்ள மோட்டார்களும் பழுதானதால் அதில் இருந்தும் தண்ணீர் கிடைக்கவில்லை. இது குறித்து பலமுறை நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
காலி குடங்களுடன் போராட்டம்
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் நேற்று மதியம் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களில் முக்கிய நபர்களை நகராட்சி அலுவலர்கள் அலுவலகத்திற்கு அழைத்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அவர்கள் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் என்று நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களுடன் நகராட்சி அலுவலர்கள் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்றனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.