கோவில்பட்டியில் 2 இடங்களில் தற்காலிக மார்க்கெட்டுகள்
கோவில்பட்டியில் 2 இடங்களில் தற்காலிக மார்க்கெட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன
கோவில்பட்டி:
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கோவில்பட்டியில் நேற்று முதல் பஸ்நிலையம், வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிக மார்க்கெட்டுகள் செயல்பட தொடங்கின.
அதிகாரிகள் ஆய்வு
கோவில்பட்டி நகரசபை தினசரி மார்க்கெட்டில் 200க்கும் மேற்பட்ட காய்கறி, பலசரக்கு மற்றும் பழக் கடைகள், மொத்த விற்பனை கடைகள் செயல்பட்டன. இங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைப் பிடிக்காமல் பொருட்களை வாங்கிச் செல்வதாக புகார்கள் எழுந்தது.
இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உத்திரவின் பேரில் கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், தாசில்தார் அமுதா, நகரசபை ஆணையாளர் ராஜாராம், சுகாதார அதிகாரி இளங்கோ ஆகியோர் திடீர் ஆய்வு நடத்தினா்.
தற்காலிக மார்க்கெட்டுகள்
இதனையொட்டி மார்க்கெட்டில் இயங்கிவந்த காய்கறி மற்றும் பழக்கடைகளை கூடுதல் பஸ் நிலையத்திலும், வ. உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்திலும் நேற்று(திங்கட்கிழமை) முதல் இயங்கு வதற்கு நகரசபை ஆணையாளர் ராஜா ராம் ஏற்பாடு செய்தார்.
இதன்படி நேற்று கூடுதல் பஸ் நிலையத்தில் 122 காய்கறிக் கடைகள், 64 பழக் கடைகள், 14 மொத்த விற்பனை கடைகள் அமைக்கப்பட்டு செயல் பாட்டுக்கு வந்தது. காலை 7 மணி முதல் 10 மணி வரை மக்கள் கூட்டம் கூட்டமாக முக கவசம் அணிந்து சமூக இடை வெளியை கடைப் பிடித்து காய்கறிகள் பழங்கள் வாங்கிச் சென்றார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன் உத்தரவின் பேரில் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் செய்திருந்தார்கள்.
நகரசபை சுகாதார அதிகாரி இளங்கோ தலைமையில் சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் ஊழியர்கள் முக கவசம் அணியாமல் வந்த 6 பேருக்கு தலா ரூ 200 அபராதம் விதித்தனர். மார்க்கெட்டில் நகரசபை நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.
காய்கறி விலைவிபரம்
காய்கறி மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ காய்கறிகள் அவரைக்காய் ரூ.40 முதல் 50 ஆகவும், வெண்டைக் காய் ரூ.10 -15 ஆகவும், மிளகாய் ரூ.30 ஆகவும், சுரைக்காய் ரூ.10 ஆகவும், புடலங்காய், சீனி அவரைக் காய், ரூ.15 ஆகவும், தக்காளி, முட்டைக் கோஸ், பெல்லாரி ரூ.20 ஆகவும், வெங்காயம் ரூ.40- 50 ஆகவும், கத்திரிக்காய் ரூ.20- 30 ஆகவும், உருளைக் கிழங்கு ரூ.30 ஆகவும், கேரட், பீட்ரூட், மாங்காய் ரூ 20 ஆகவும், சவுச்சவ் ரூ.15 ஆகவும், மல்லி ரூ.40 ஆகவும், பாவக்காய் ரூ.50 ஆகவும், விற்பனை செய்யப்பட்டது. மாம்பழங்கள் சப்பட்டை ரூ.25 ஆகவும், இமாம்ஸ் ரூ.80 ஆகவும், பஞ்சவர்ணம் ரூ.30 ஆகவும், கிளிமூக்கு ரூ.20 ஆகவும், சப்போட்டா, பப்பாளி ரூ 10 ஆகவும், மாதுளை ரூ 50 -100 ஆகவும், பச்சை திராட்சை ரூ.80 -120 ஆகவும், பன்னீர் திராட்சை ரூ.20 -60 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
பகல் 12 மணி வரை திறக்க கோரிக்கை
மார்க்கெட்டில் சரக்குகள் கிராமங்களிலிருந்து காலை 7 மணி முதல் 8.30 வரை கொண்டு வரப்படுவதால், காய்கறி, பழங்கள் விற்பனையை பகல் 12 மணி வரை விற்பனை செய்ய அனுமதித்தால் வியாபாரி களுக்கு நஷ்டம் இல்லாமலும், பொது மக்களுக்கு வசதியாகவும் இருக்கும் என்று மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ். ராஜேந்திரன் தெரிவித்தார்.