புயலில் சிக்கி மாயமான நாகை மீனவர்களின் கதி என்ன? 2-வது நாளாக மீனவ கிராமத்தில் உறவினர்கள் சோகம்

கேரளாவில் புயலில் சிக்கி மாயமான நாகை மீனவர்களின் கதி என்ன? என்று தெரியாமல் 2-வது நாளாக மீனவ கிராமத்தில் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

Update: 2021-05-17 11:27 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது23). மீனவர். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும், தனது தந்தை இடும்பன்(50), அண்ணன் மணிவேல் (27), நாகூர் பட்டினச்சேரியைச் சேர்ந்த தினே‌‌ஷ்(35), இளஞ்செழியன் (35),அக்கரைப்பேட்டை சேர்ந்த பிரவீன் (25) உள்பட 10 மீனவர்கள் கேரளா மாநிலம் கொச்சியில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

இந்தநிலையில் இவர்கள் கடந்த 2-ந் தேதி கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் எச்சரிக்கையை அறிந்த அவர்கள் கொச்சி துறைமுகத்தை நோக்கி கரை திரும்பிக் கொண்டிருந்தபோது புயலில் சிக்கினர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் விசைப்படகு தூக்கி வீசப்பட்டு கடலில் மூழ்கியதாக தெரிகிறது.

10 மீனவர்கள் மாயம்

இதில் நாகையைச் சேர்ந்த மணிகண்டன், இடும்பன் மணிவேல், தினே‌‌ஷ், இளஞ்செழியன், பிரவீன் என 6 பேர் உள்பட 10 மீனவர்கள் நடுக்கடலில் மாயமாகினர். அவர்களுக்கு அருகில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பியவர்கள், நாகை மீனவர்கள் கடல் அலையில் சிக்கி மாயமானது குறித்து சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அறிந்த அவர்கள், கடலுக்கு சென்ற தங்களது உறவினர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் நேற்று முன்தினம் ஒன்று திரண்டு மாயமான மீனவர்களை மீட்டுத் தரக்கோரி வாயிலும், வயிற்றிலும் அடித்தபடி பெண்கள்கதறி அழுதனர். மேலும் மீனவர்களை மீட்டுத் தரக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

2-வது நாளாக சோகம்

இந்த நிலையில் கடலில் மாயமான மீனவர்களின் கதி என்ன? என்று தெரியாமல் நேற்று 2-து நாளாக சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் மீனவர்களின் உறவினர்கள் சோகமாக காணப்பட்டனர். அப்போது மீனவர்களை மீட்டு தரக்கோரி அவர்கள் அழுது கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த முகமது ‌ஷா நவாஸ் எம்.எல்.ஏ., திமுக மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் ஆகியோர் சாமந்தான் பேட்டைக்கு வந்து, மாயமான மீனவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதுகுறித்து, மீன்வளத்துறை அமைச்சரிடமும், தமிழக முதல்-அமைச்சரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மாயமான மீனவர்கள் ஒரு தீவில் கரை ஒதுங்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. விரைவில் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

மேலும் செய்திகள்