தானேயில் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடலாம்; குடியிருப்பு வளாகங்களில் தடுப்பூசி முகாம் நடத்தவும் மாநகராட்சி அனுமதி

தானேயில் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2021-05-17 10:46 GMT

மேலும் குடியிருப்பு வளாகங்கள், தனியார் நிறுவனங்களில் தடுப்பூசி முகாம் நடத்தவும் மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.

தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுமதி

மராட்டியத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. கடுமையாக அதிகரித்து வரும் இந்த பாதிப்பு குறிப்பாக மும்பை, தானே மற்றும் புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களை கடுமையாக பாதித்துள்ளது.இந்த நிலையில் தானே மாநகராட்சி தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி போட அனுமதி வழங்கியுள்ளது.

குறிப்பாக மொத்தம் 85 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வேகமாக தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தானே மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து தானே மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில் கூறியதாவது:-

வழிகாட்டு நெறிமுறைகள்

தடுப்பூசி பணியை வேகப்படுத்த தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு மருந்து அனுப்பப்பட்டு உள்ளது. இதுமட்டும் இன்றி குடியிருப்பு வளாகங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களும் தடுப்பூசி முகாம்களை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளன. அவை செயல்படுவது குறித்த விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதன்மூலம் அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசியை கொண்டு சேர்க்க முடியும்”.

இவ்வாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதேபோல தானே மாநகராட்சி கமிஷனர் விபின் சர்மா மற்றும் மேயர் நரேஷ் மஸ்கே ஆகியோர் தானேவுக்கு 5 லட்சம் கொரோனா தடுப்பூசி வாங்க உலகளாவிய டெண்டர் விட முடிவு செய்துள்ளனர்.

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி தடைப்பட்டுள்ள இந்த வேளையில் தானே மாநகராட்சியின் நடவடிக்கை கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் செய்திகள்